உ.பி., 10.4 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி ; முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ : கொரோனாவால் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஊரடங்கால் வேலையின்றி சிக்கி தவித்த எண்ணற்ற தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு குறித்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் தொடர்பாக மாநில முதல்வர் யோகி பல்வேறு கட்டமாக நடவடிக்கையையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

உ.பியை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க, தேசிய கட்டுமான வளர்ச்சி கவுன்சில் நிறுவனத்துடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் உ.பியை சேர்ந்த சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர் என முதல்வர் நேற்று அறிவித்தார். இந்நிலையில், தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 நிதியதவியாக வழங்கப்படும் எனவும் இன்று யோகி கூறினார்.


அவர் மேலும் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். இதில் 10. 4 லட்சம் பேருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.1,000 நிதியுதவியாக செலுத்தப்பட்டுள்ளது. மற்ற தொழிலாளர்களுக்கும் படிப் படியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

உ.பிக்கு திரும்பும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக தன்மைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ( குறிப்பாக அவர்களது அயராத உழைப்பிற்கு) முக்கிய பங்கு உண்டு. சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர். அவர்களின் நலனுக்கான திட்டங்களில் உ.பி. அரசு சிறப்பாகச் செயல்படுகிறது.
வெளி மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உ.பி. திரும்புவதற்கு 12,000-க்கும் அதிகமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்வாறு கூறினார். தொடர்ந்து, கோரப்பூர், வாரணாசி, ஜான்சி, சித்தார்த் நகர், மற்றும் கோண்டா பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளிடமும் கான்பரன்சிங் மூலமாக யோகி கலந்துரையாடினார். மற்ற தொழிலாளர்களுக்கு விரைவில் நிதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *