ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இன்று அயோத்தி சென்றார். இன்று மதியம் அயோத்தி வந்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலில் லஷ்மண், பாரத் மற்றும் ஷத்ருகன் சிலைகளை புதிய இடங்களில் அமைக்க நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்றார். மேலும், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளையும் ஆதித்ய நாத் நேரில் ஆய்வு செய்தார்.
ராம ஜென்ம பூமி வளாகத்தில் நடைபெறும் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 200 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும் விழாவுக்கு முன்னதாக மூன்று நாள் வேத மந்திரங்கள் முழங்க சடங்குகள் நடைபெறும். பூமி பூஜையின் போது கோயில் கருவறை அமையும் பகுதியில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை அடிக்கல்லாக மோடி நடுவார்.1988-ல் வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அப்போது கோவிலின் உயரம் 141 அடி உயரமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை தற்போது 20 அடி உயர்த்தி 161 அடியாக்கியுள்ளனர். கூடுதலாக இரண்டு மண்டபங்கள் அமைக்க உள்ளனர். கோவில் பணிகள் முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளனர்.