பாகிஸ்தான், தலிபான் அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலக பயங்கரவாதியாக ஐ.நா அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்-இ தலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுத்தை உலக பயங்கரவாதியாக அறிவித்தது. இதனையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது; அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்.

ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் ISIL மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் மெஹ்சுட்டைச் சேர்த்தது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஆதரவாகவும், சேர்ந்தும், செயல்பட்டு அவர்களுக்கு நிதியுதவி அளித்து, திட்டமிடல், செயல்பாட்டு வசதி செய்து கொடுத்தல் ஆகிய உதவிகளையும் செய்வதாகவும் ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

அல்-கைதாவுடனான தொடர்புக்காக தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஜூலை 29, 2011 அன்று தடை செய்யப்பட்டது. தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் மெளலானா ஃபஸ்லுல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து, 2018 ஜூன் மாதம், மெஹ்சுத் அவ்வமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதலுக்கு அவ்வமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. 2010 மே 1 அன்று டைம்ஸ் சதுக்கத்தில் குண்டுவெடிப்பு முயற்சிக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது. 2010 ஏப்ரலில் பெஷாவரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு எதிராக பலதரப்பட்ட தாக்குதல்களை இவ்வமைப்பு தான் நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *