இங்கிலாந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதே போல் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அந்நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை டிஜிட்டல் செயலாளர் ஆலிவர் டவுடன் வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் நாட்டின் 5ஜி வெளியீடு ஒரு வருட காலத்திற்கு தாமதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நிலைமை சீராகும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது சுலபமான முடிவு இல்லை என்றாலும், நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய தடை மற்றும் ஆண்டின் தொடக்கத்தில் ஹூவாய் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ஆகும் மொத்த செலவு 2 பில்லியன் டாலர் வரை இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
ஹூவாய் நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், செமிகன்டக்டர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் அமெரிக்க அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகளால் இனி வரும் உபகரணங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்பதால், ஹூவாய் ஏற்கெனவே வழங்கிய 2ஜி, 3ஜி, 4ஜி கருவிகளை அகற்ற வேண்டிய அவசியம் இருக்காது என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.