சீன அடக்குமுறைகளுக்கு எதிராக நீதி கேட்டு பன்னாட்டு நீதிமன்றத்தை அனுகிய உய்குர் முஸ்லிம்கள்

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும் இது.

சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற அந்நாடு திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். இதனால், சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது தொடர்பாக நியூயார்க்டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இரண்டு உய்குர் முஸ்லிம்கள் செயல்பாட்டுக் குழுவை 2 லண்டன் வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இது தொடர்பாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 2 உய்குர் குழுக்கள், கிழக்கு துருக்கிஸ்தான் புலம்பெயர் அரசு மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகள் சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளன. இது தொடர்பாக கிழக்கு துருக்கிஸ்தான் அமைப்புக் கூறுகையில், ‛ஆக்கிரமிக்கப்பட்ட ஜின்ஜியாங், அதாவது கிழக்கு துருக்கிஸ்தான் பகுதிக்குள் தாஜிகிஸ்தான், கம்போடியாவிலிருந்து வரும் உய்குர் முஸ்லிம்களை நாடு கடத்துகின்றனர்.

சீனாவுக்கு திரும்புபோது இவர்களை கடும் குற்றச்செயல்களுக்கு ஆட்படுத்துகின்றனர்; கொலை செய்கின்றனர், சட்ட விரோத சிறை, சித்ரவதை, கட்டாய பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை, கட்டாயத் திருமணம் என சீன கம்யூனிஸ்ட் கட்சி, கடும் அராஜகங்களை இவர்கள் மீது ஏவி விடுகிறது,’ எனக் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பான 80 பக்க புகாரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 30 சீன அதிகாரிகளைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிட்டன் வழக்கறிஞர் ராட்னி டிக்சன் கூறியதாவது: இது மிகவும் முக்கியமான வழக்கு. ஏனெனில் நீண்ட காலமாக சீனாவை யாரும் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது, பொறுப்பாக்க முடியாது எனக் கருதி வருகின்றனர். புகார்தாரர்கள், சித்ரவதை அனுபவித்தவர்களின் நேரடி சாட்சியங்களை இணைத்துள்ளனர்.

மின்சாரம் பாய்ச்சிக் கொல்லுதல், பன்றி இறைச்சியை கொடுத்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி இழிவுப்படுத்துதல், கடும் குடிக்கு ஆளாக்குதல், உய்குர் முஸ்லிம் பெண்கள் குழந்தைப் பேறு பெற முடியாதபடி கருத்தடை சாதனங்களை பொருத்துதல். சுமார் 5 லட்சம் உய்குர் முஸ்லிம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து அனாதை முகாம்களுக்கு அனுப்புதல் ஆகியவற்றோடு அங்கு குழந்தைகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *