சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த களமிறங்கியது கமாண்டோ படை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை இன்று கொரோனாவின் தலைநகர் போல உருவெடுத்து வருகிறது. அந்தளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை. இதனால் தற்போது கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது.

மக்கள் நெருக்கம் மிகுந்த கொருக்குப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்திய கமாண்டோ படயினர், வெளியே நடமாடிய மக்களை எச்சரித்து அனுப்பினர். சென்னை மாநகரில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு ராயபுரம் மண்டலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,607-ஆக அதிகரித்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5,355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வடசென்னையில் கொரோனா பரவல் அதிகமாகி இருப்பதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கமாண்டோ படை தற்போது களமிறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *