20 கோடி இந்திய வாடிக்கையாளர்களை இழந்தது டிக்டாக், பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி நஷ்டம்

லாடாக் எல்லையில் நடந்த மோதலையடுத்து, டிக்டாக், ஷேர்சாட், உள்பட 59 சீனநாட்டு செயலிகளைத் தடை விதித்தது இந்திய அரசு. இதனால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் ரூ.45,000 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 20 கோடி இந்தியர்கள் டிக்டாக்கை பயன்படுத்தி வந்தனர். இந்த கஸ்டமர்களையும் டிக் டாக் இழந்துள்ளது.

இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த மாதத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா எல்லைப் பிரச்னையால் சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தான் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். சுமார் ரூ 45,000 கோடி மதிப்புக்கு இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும்” என்று சொல்லப்பட்டுள்ளது.

டிக்டாக் மட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட செயலிகளின் தாய் நிறுவனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட விதத்தில் இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த சில வருடங்களில் பைட் டான்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ.7,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்தது. பைட் டான்ஸ் நிறுவனத்தின் சிறிய அளவிளான வீடியோக்களை பகிரும் செயலி டிக்டாக், இதே நிறுவனம் தான் சமூக வலைத்தளம் போல செயல்படும் ஹலோ செயலியை இந்திய சந்தையைக் குறி வைத்து அறிமுகம் செய்தது. அதே போல விகோ வீடியோ எடிட்டிங் செயலியும் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதுதான்.

மொபைல் செயலி பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவரின் தரவுப்படி மே மாதத்தில் மட்டும் உலகளவில் டிக்டாக் 12 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக்கின் பங்கு 20 சதவிகிதம் ஆகும். அமெரிக்காவை விட இது இரு மடங்கு அதிகம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *