ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி

சென்னை: லடாக் இந்திய – சீன ராணுவ மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15ம் தேதி இரவு சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சீனா ராணுவம் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியும் ஒருவர்.

இந்நிலையில் தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய ராணுவ வீரர்  திரு கே.பழனி சீனாவுடனான தாக்குதலில் துணிச்சலோடு செயல்பட்டு, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார். அவரது உயிர் தியாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக, தமிழகத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் தனது நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாயை இந்திய ராணுவத்தின் ஹவில்தார் திரு கே.பழனியின் மனைவிக்கு வழங்கியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் சார்பாக வீரமரணம் அடைந்த பழனியின் இல்லத்திற்கு சென்ற மேஜர் அஜய் பி.எஸ்.ராதோர், பழனியின் மனைவியான வானதிதேவியிடம் ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது பழனியின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான அனைத்து உதவிகளை செய்வதாக ஆளுநர் கூறியுள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். மேலும் பழனியின் மனைவி வானதிதேவிக்கு ஆசிரியர் பணி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *