தமிழகத்தில் நேரடி முதலீடு செய்ய முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் முதலீடு செய்ய பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வா் பழனிசாமி கடிதம்.

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

உலகெங்கும் உள்ள முதலீட்டாளா்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈா்ப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. சமீபத்தில் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக அவர்களை ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது, ‘பெடக்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் (மற்றும்) முதன்மைச் செயல் அலுவலர் பெரட்ரிக் டபிள்யு. ‘ஸ்மித் மற்றும் யுபிஎஸ்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டேவிட் பி. அப்னே, ஆகிய 2 முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைவர்களுக்கும், சவுதி அரெம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் எச்.நாசர், ‘எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் தலைவர் டாரன் வுட்ஸ் மற்றும் ‘சிபிசி கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜியா ருயே ஊ ஆகிய 3 முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் தலைவர்களுக்கும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து முதல் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டும், புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *