சீனாவை கோபப்படுத்தும் வகையில் தலாய் லாமாவை தனது நாட்டிற்கு வருகை தர வேண்டும் என தைவான் வரவேற்றுள்ளது.
தைவான் அதிபரின் இந்த நடவடிக்கையை சீனா சந்தேக கண் கொண்டு பார்க்கிறது. தைவான் ஏற்கனவே சீன குடியரசு என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர நாடு என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறுகிறார். சீன குடியரசு என்பது தைவானின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும்.
நாடுகடத்தப்பட்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் வருகையை தைவான் வரவேற்கும் என்று அதன் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று கூறியது. தலாய் லாமாவை ஒரு ஆபத்தான பிரிவினைவாதி என்று கருதும் சீனா இதனால் எரிச்சல் அடைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் முதன்முதலில் அதிபராக சாய் இங்-வென் பதவியேற்றார். சீன உரிமை கோரும் ஜனநாயக தீவான தைவானிற்கு தலாய் லாமா கடைசியாக 2009ம் ஆண்டு சென்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடிய தலாய் லாமா, வீடியோ இணைப்பு மூலம் தைவானில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார், அதில் பிறந்த நாள் செய்தியாக தலாய் லாமா தான் மீண்டும் தைவானுக்கு வர விரும்புவதாக தெரிவித்தார். அரசியல் சூழ்நிலை மாறும்போது, நான் உங்களை மீண்டும் தைவானில் சந்திப்பேன் என நான் நம்புகிறேன். என்ன நடந்தாலும் நான் உங்களுடன் ஆன்மா மூலம் கலந்து இருப்பேன், ”என்று அவர் தனது இணையதளத்தில் கூறினார்.
தைவான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜோன் ஓ கூறுகையில் தலாய் லாமா தீவுக்குச் வருகை தர கோரும் விண்ணப்பம் இதுவரை அரசுக்கு கிடைக்கவில்லை, ஆனால் பொருத்தமான விதிகளை பின்பற்றி அனுமதி அளிக்கப்படும் என்றார்.