இலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு

மதுரை: இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார். மதுரையில் தனியார் விடுதி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இல. கணேசன் தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றன. அது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, முறையாக நாடாளுமன்றத்தில் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு பின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்

இச்சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடுதான் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் போராட்டம் என்று திசை திருப்புவது ஏற்கத்தக்கதல்ல.இந்தச் சட்டத்தில் எங்கும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடப்படவில்லை. வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள்தான் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறு வேறு அல்லர். ஆகையால் இது குறித்து இந்திய இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தங்களது சொந்த தேசத்திற்கு திரும்புவதையே விரும்புகின்றனர். அவர்கள் இங்கு வசதியாக வாழ்வதையும் குடியுரிமை வழங்குவதையும் நானும் வரவேற்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை இங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவரிடம் இஸ்லாமிய மாணவி ஒருவர் நடந்துகொண்ட விதம் மிகத் தவறானது. தலைவர்களின் தவறான வழிகாட்டுதலில் அவ்வாறு நடந்து கொண்டார் என்று நான் கருதுகிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜக – அதிமுக கூட்டணியோடு இணைந்து போட்டியிடுகிறது. மதுரை மாவட்டத்தில் கணிசமான தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. வேட்பாளர்களின் தகுதி, நேர்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் இல.கணேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *