சீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் எச்சரித்த பிரதமரின் ஸ்ரீ கிருஷ்ணர் என்னும் போர்க்குறியீடு..!
“படைமாட்சி கூறும் வள்ளுவனும் பாரத போர் நடத்திய பகவான் கிருஷ்ணரும்”
இந்தோ-சீன பிரச்சினையில் மோடி உணர்த்திய பாரதத்தின் போர் குறியீடுகள்..
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையில் பதற்றம் ஏற்பட்ட உடனே தைவான் நாடு பாரதத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் யார் என்பதனை தெளிவாக புரிந்து கொண்டு ட்ராகனை ராமபிரான் அம்பால் தாக்குவது போன்ற ஒரு படத்தை வெளியிட்டது..
இந்த ஒற்றை படமே பாரதத்தின் இன்றைய ஆட்சியாளர்களின் அடையாளத்தை வரலாற்றுடன் ஒப்பிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை வழுவாக சொன்னது. பெண்ணை கவர்ந்து சென்றவனை தேடிச்சென்று வதம் செய்த ராமரை வழிபடும் சேனைகள் இவர்கள் என்பதனை உணர்த்தியது ..
அத்தகையவர்களிடம் சீனாவின் நாடு பிடிக்கும் கொள்கை தோற்று போகும் என்பதனை தெளிவாகவும் மறைமுகமாகவும் எடுத்துரைத்தனர் தைவான் நாட்டினர்..
லடாக்கில் பாரதபிரதமர்
லடாக் சென்ற பிரதமர் அங்கு ராணுவ வீரர்களிடம் உரையாடும் போது மூன்று விசயங்களை மையப்படுத்தி பேசினார் “ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழலும் சுதர்சண சக்கரமும்” , “வள்ளுவர் கூறிய படைமாட்சி” , மற்றும் “அமைதிக்கு தேவை வீரமும் துணிவும்” என்பதனை குறியீடாக பேசினார். இதன் மூலம் பிரதமர் சீனாவிற்கு மட்டுமல்ல உலகிற்கு என்ன சொல்ல வருகிறார் என்பதனை பார்ப்போம்.
ஸ்ரீகிருஷ்ணர்
ஸ்ரீகிருஷ்ணர் யார்..? குருசேத்திர போர் நடத்தியவர்.
அத்தகையவரை சீன எல்லையில் பேசும்போது குறிப்பிடுகிறார் என்றால் மண்ணுக்காக போரை நடத்தியவர்கள் எங்கள் பாரத மைந்தர்கள் என்பதனை கிருஷ்ணர் என்ற குறியீட்டின் வாயிலாக தெளிவாக குறிப்பிடுகிறார்..
அத்தோடு மட்டுமல்லாமல் எல்லையில் போரை விரும்புவதும் அமைதியை விரும்புவதும் என இரண்டு வாய்ப்புகளை கௌரவர்களிடம் தூது சென்ற கிருஷ்ணரை போல முன்வைத்து பேசினார். நீ, போரை விரும்பினால் நாங்கள் சுதர்சன சக்கரம் ஏந்தவும் தயார். அதே வேலையில் அமைதியை விரும்பினால் புல்லாங்குழல் இசைக்கவும் தயார் என்பதனை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார்.
நீ, எதை தேர்ந்தெடுத்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயார் என்பதனை தான் பிரதமர் தெளிவாக கிருஷ்ணரை குறிப்பிட்டு பேசினார்…
அமைதிக்கு தேவை வீரமும் துணிவும்
ஒரு போர் எப்போது ஏற்படும் என்று பாருங்கள். ஒருவன் வலுவானவனாகவும் ஒருவன் வலு இழந்தவனாகவும் இருக்கும் சூழலில் தான் நேரடியாக போர் ஏற்படும். ஏனெனில் அப்போது தான் வெற்றி வலுவானவன் வசப்படும்.
ஆனால், அமைதி என்பதை எப்போது விரும்புவார்கள் என்று பார்த்தால் இருவரும் சம பலமாக இருக்கும் போது இருவருக்குமே பேரிழப்பு ஏற்படும் சூழல் இருப்பதை உணர்ந்த பின்பு தான்..
அதை தான் மோடி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூற்றாண்டில் நாடு பிடிக்கும் கொள்கை எடுபடாத ஒன்று. ஆகையால் எங்களை வீழ்த்தும் மனப்பான்மை உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் நாங்கள் வீரமாகவும் துணிவாகவும் இருக்கிறோம்.
இந்த துணிவு சண்டையையும் விரும்பும் சமாதானத்தையும் விரும்பும். மாறாக ஒரு போதும் அடி பணிந்து பின் செல்ல மாட்டோம் என்பதனையும் தெளிவாக சுட்டினார்.
படைமாட்சி கூறிய வள்ளுவர்
இராணுவ வீரர்களிடம் பேசும் போது ஒரு படையானது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை குறிக்கும் பொருட்டு திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
“மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு..”
அதாவது வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும் என குறிப்பிட்டு பேசி படை வீரர்களுக்கு எழுச்சியை ஊட்டி வந்தார்…இத்தனையும் நடந்தது நாடாளுமன்றத்தில் அல்ல, நாட்டின் எல்லையில் எதிரி நாட்டுக்கு உரைக்கும் வகையில் தெளிவாக பேசினார் பிரதமர் மோடி.
இத்தனை அர்த்தம் நிறைந்த பேச்சுக்களை சீன நாட்டினர் புரிந்து கொண்டனர். உடனடியாக எல்லையில் இந்தியா பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் அமைதியால் தீர்வு காண்போம் என்பதனை சீன வெளியுறவுத்துறை தெளிவாக குறிப்பிட்டனர்.
ஆனால் இக்கட்டான சூழலில் கூட மக்களாட்சி நாட்டில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சீனாவின் பெயரை ஏன் மோடி குறிப்பிடவில்லை என கேள்வி கேட்பது மூத்த அரசியல்வாதி ப.சிதம்பரம் போன்றோரின் சிறுபிள்ளை தனமாகும்.