டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைப்பதை நோக்கமாக கொண்டு பல வாரங்களாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அது கைகொடுக்காத நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசின் பல நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இதற்கிடையில் நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான அறிவிப்பை மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) புதன்கிழமை (ஜூன் 24) வெளியிட்டுள்ளது. அதில், பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான தேதி மேலும் மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்ககை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை, ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அத்துடன், ஆதார் அட்டையை , பான் நம்பருடன் இணைப்பதற்கான கால வரம்பையும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்க, 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.