பயங்கரவாத அமைப்புகளுக்கு வசதிகள் செய்து தரும் பாகிஸ்தான் – இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் படி அந்நாட்டிடம் உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா.வில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த கலந்துரையாடல் காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய மூத்த அதிகாரி மஹாவீர் சிங்வி பாகிஸ்தான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மனித உரிமைகளை பாதுகாத்து அதை நிலைநிறுத்துவதற்கு நாம் எடுத்துள்ள கூட்டுத் தீர்மானத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் இது. பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும் மோசமான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதற்காக அம்நாடு இந்த மன்றத்தை மீண்டும் பயன்படுத்தியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்திய எல்லையில் பயங்கரவாதிகள்க்கு ஆதரவாக நிதி தளவாடங்களை வழங்குவதுடன் அதைச் சுதந்திரப் போராட்டமாக சித்தரிக்க முயல்கிறது. பேரழிவு தரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை பாகிஸ்தான் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அல்குவைதா பயங்கரவாதிகளை நாட்டிலிருந்து முழுமையாக வெளியேற்றி விட்டதாகக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், பின்லேடனை தியாகி என்று நாடாளுமன்றத்திலேயே வர்ணிக்கிறார். தங்கள் நாட்டில் 40000 பயங்கரவாதிகள் இருப்பதையும் அவர்கள் அண்டை நாட்டை தாக்கியதையும் அவரே ஒப்புக் கொள்கிறார். ஜெய்ஷ்-எ-முகமது, லஷ்கர் அமைப்புகளைச் சேர்ந்த 6500 பயங்கரவாதிகள் ஆப்கானில் செயல்படுகின்றனர் என ஐநா பாதுகாப்புக் குழுவே தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையமாக, புகலிடமாகத் திகழ்வது பலராலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *