வந்தே பாரத் திட்டம் மூலம் 5.80 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை விமானம் மூலம் அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத்  திட்டத்தை செயல்படுத்தியது. இதுவரை 3 கட்டத் திட்டங்கள் முடிந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

இது தவிர கடல்மார்க்கமாக சமுத்திர சேது திட்டமும் செயல்படுத்தப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் 3 கட்ட வந்தே பாரத் திட்டம் முடிந்துள்ள நிலையில் இதுவரை 5.80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தில் ஏர் இந்தியா விமானங்கள், தனியார் விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டார்கள். முதல் கட்டத் திட்டம் மே 7 முதல் 15ம் தேதி வரையிலும், 2வது கட்டம் மே 17 முதல் 22 வரையிலும் இருந்து பின்னர் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டது. 3-வது கட்டம் ஜூன் 11 முதல் ஜூலை 2 வரை செயல்படுத்தப்பட்டது. 4-வது கட்டம் செயல்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியா வர, ஜூலை 8ம் தேதி வரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 352 பேர் தூதரகங்களில் பதிவு செய்து, அதில் 5.80 லட்சம் பேர் தாயகம் வந்துள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் என கட்டாய காரணங்களுடன் இந்தியாவுக்கு வர வேண்டிய உள்ளவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுகின்றனர். இன்னும் வந்தே பாரத் திட்டம் தொடரும். 637 சர்வதே விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 29 விமானநிலையங்களுக்கு இவை இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *