ஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓமன் நாட்டில் இதுவரை 69 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 337 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 25 முதல் ஆக., 8 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில், இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து வகையான இயக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தில் கடைகள் அனைத்தும் மூடியிருக்க வேண்டும் எனவும், தீவிரமான ரோந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான கூட்டங்கள், ஈத் பிரார்த்தனைகள் மற்றும் பாரம்பரிய ஈத் சந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.