ராமர் குறித்த பிரதமரின் கருத்து அரசியல் சார்ந்தது இல்லை – நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார்.

அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் ராமர் பிறந்தார் என அவர் கூறினார்.

நேபாள பிரதமரின் இந்த கருத்துக்கு நேபாளத்திலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் கமல் தபா, இந்தியா நேபாள உறவை மேலும் சிதைக்கும் வகையில் ஷர்மா ஒலியின் பேச்சு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேபாள எழுத்தாளரான கனக் மணி தீக்‌ஷித், “இந்திய அரசுடன் முரண் இருக்கும் போது, இப்போது அந்நாட்டு மக்களுடன் முரண் ஏற்படும் வகையில் ஒலி பேசி உள்ளார்,” என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள பிரதமர் வெளியிட்ட கருத்து அரசியல் கருத்து அல்ல. அதை யார் மனதையும், உணர்வையும் புண்படுத்த கூறப்படவில்லை.

ராமர் மற்றும் அவரின் பிறப்பிடம் தொடர்பாக பல்வேறு கதைகள் உள்ளன எனவே, ராமர், ராமாயணம் மற்றும் அதனோடு தொடர்புடைய இடங்களின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ள ராமாயணத்தில் வரும் மிகப்பெரிய கலாசார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

அயோத்தியின் மதிப்பையோ அல்லது அதன் கலாசார முக்கியத்துவத்தையோ குறைப்பதற்காகவோ இந்த கூற்றை கூறவில்லை.

ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் விவாஹா பஞ்சமி திருவிழாவின்போது, இந்தியாவின் அயோத்தியிலிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் வரை திருமண ஊர்வலம் நடைபெறும். மேலும் 2018ஆம் ஆண்டு ஜனக்பூரிலிருந்து அயோத்திக்கு பேருந்தும் விடப்பட்டது. இது இரு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள கலாசார பந்தத்தை குறிப்பதாக உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *