ஒரு அங்குல நிலத்தை கூட, எந்த நாடும் தொட முடியாது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னையில் பேச்சுவார்த்தையின் மூலம் எந்தளவுக்கு தீர்வு காணப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. அதே நேரம், நாட்டின் ஒரு அங்குலத்தை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என உறுதியாக கூற முடியும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னையில், இரு தரப்பிலும் படைகளை விலக்கி கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவானே ஆகியோரும் சென்றனர்.

லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ஸ்டக்னாவில் ராணுவத்தினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பின், பாதுகாப்பு படையினர் நடத்திய சாகச நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஒத்திகைகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.  பின்பு, லுகுங் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது;
இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்னை பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தளவுக்கு தீர்வு ஏற்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. அதே நேரம், நாட்டின் ஒரு அங்குலத்தை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என உறுதியாக கூற முடியும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு ஏற்பட்டால், அதை விட சிறந்தது ஒன்றுமில்லை.

உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் சிலர் உயிரிழந்ததை நினைத்து வருந்துகிறேன். அவர்களது உயிர் தியாகம் வீணாகாது.  இவ்வாறு அவர் பேசினார். கடந்த 3ம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, டாக் சென்று வந்த நிலையில், ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அங்கு ஆய்வு மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *