நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்குத் தடை: நிதின் கட்கரி

புதுடெல்லி: இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, சீனாவின் அராஜகத்தைக் கண்டிக்கும் விதமாக சீனாவில் தயாராகும் செயலிகள் எதையும் பயன்படுத்தக்கூடாது. சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷமும் இந்தியாவில் எழுந்து வருகிறது. 

இந்தநிலையில், மத்திய நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்து துறை மற்றும் சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார் இதுகுறித்து, பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அவா் கூறியதாவது: சாலை கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு நிறுவனமாக வந்தாலும், அவா்களுக்கு கட்டுமானத் திட்டப் பணிகளை வழங்குவதில்லை என உறுதியாக முடிவெடுத்துள்ளோம்.

நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில், சீன நிறுவனங்களுக்கு தடை விதித்தும், இந்திய நிறுவனங்களை அனுமதிப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தியும் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும். சீன நிறுவனங்களுடன் இணைந்து முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான சாலைத் திட்டங்களே நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில்  புதிய கொள்கையின்படி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்கு தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்டவற்றுக்காக வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியிருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். மேலும், சிறு,குறு, நடுத்தர தொழில் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீன முதலீட்டாளா்களை அனுமதிப்பதில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும், இனி வரும் காலங்களில் அதற்கு தடை விதிக்கப்படும். தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கூட்டுத் திட்டமாக இருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *