வங்கி மோசடி நீரவ் மோடியின் ரூ330கோடி சொத்துக்கள் பறிமுதல்

வெளிநாடு தப்பியோடிய மோசடி வைர வியாபாரியான நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பினர். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிரவ் மோடி, கடந்த ஆண்டு, மார்ச்சில், லண்டனில் பிடிபட்டார். அவரை கைது செய்த பிரிட்டன் போலீசார், ‘வான்ட்ஸ்வொர்த்’ சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே, அவரை நாடு கடத்தும் முயற்சியில், இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள, ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்தாண்டு டிச.,5ம் தேதி நிரவ் மோடி, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு கோர்ட் அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 8 ம் தேதி நிரவ் மோடியின் சொத்துக்களை ஒரு மாதத்திற்குள் பறிமுதல் செய்ய மும்பை சிறப்பு கோர்ட் அனுமதியளித்திருந்தது.

இதன் அடிப்படையில் மும்பை வோர்லியில் உள்ள சமுத் மஹால், கடற்கரை பண்ணை வீடு மற்றும் அலிபாக்கில் உள்ள நிலம், ராஜஸ்தானின் ஜெய்சால்மேரில் ஒரு காற்றாலை, லண்டனில் உள்ள பிளாட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பங்குகள் மற்றும் வங்கி வைப்புத்தொகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஹாங்காங்கில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிரவ் மோடி, மெகுல் சோக்ஸிக்கு சொந்தமான ரூ. 1,350 கோடி மதிப்பிலான பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், முத்துக்கள், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் 108 சரக்கு பெட்டகங்களில் மும்பை கொண்டுவரப்பட்டன. தற்போது வரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.2,348 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *