ஈரானில் இருந்து 687 தமிழக மீனவர்களுடன் ஐஎன்எஸ் ஜலஸ்வா போர்க் கப்பல் தூத்துக்குடி புறப்பட்டது

கொரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகத்திற்குதொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.

வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியான ‘சமுத்திர சேது’ என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

அந்தவகையில் கொரோனா ஊரடங்கால் ஈரானி் சிக்கிய தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படை போர்க் கப்பலான ஐஎன்எஸ் ஜலஷ்வா ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை 25 ஜுன், 2020 அன்று சென்றடைந்தது.

முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வியாழக்கிழமை ஈரானில் இருந்து தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்துள்ள தமிழக மீனவர்கள் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் அப்பாஸ் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கட்டாய மருத்துவ மற்றும் உடமைகள் பரிசோதனைக்குப் பிறகு, 687 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தக் கப்பல் தூத்துக்குடி புறப்பட்டது.

இந்த கப்பலில் வருபவர்கள் சிறப்பு பேருந்துகள்   மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.  பிறகு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும்.  அதோடு, அவர்களை தனிமைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *