மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டம், படா மலஹாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக தேர்வானவர் பிரதியுமான் சிங் லோதி. இவர் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆளுங்கட்சியான, பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார்.

மத்திய பிரதேச மாநில காங்கிரசில் இருந்து மார்ச் மாதம், 22 எம்.எல்.ஏக்கள் விலகினர். இதையடுத்து, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, ஆட்சியை பாஜக கைப்பற்றியது. தற்போது காங்கிரஸில் மேலும் ஒருவர் விலகியதால், சட்டசபையில் அக்கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 91 ஆக குறைந்துள்ளது.
பிரதியுமான் சிங் லோதி பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் தனது எம்.எல்.ஏக்கள் வேறுயாரும் பாஜகவில் இணைந்து விடுவார்களோ என்ற கலக்கத்தில் காங்கிரஸ் உள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது லோதி பாஜகவில் ஐக்கியமாகி உள்ளதால் மேலும் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.