இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் நடந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், 39 வயதான ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவும் ஒருவர் ஆவார்.
இந்நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், சந்தோஷிக்கு பணி ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, மூத்த அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்கள் அவருடன் இருந்ததனர். பின்னர் முதல்வரே, ஹைதராபாத்தில் உள்ள அதிகாரிகளை சந்தோஷிக்கு அறிமுகம் செய்து வைத்து புதிய துணை ஆட்சியருக்கு பணிகள் அனைத்தும் தெரியும் வரை ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பவர்கள் அவருக்கு உதவ வேண்டும் என முதல்வரே கேட்டுக்கொண்டார்
ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் குடும்பத்திற்கு தெலுங்கானா அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில், சந்தோஷியின் இல்லத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சென்று சந்தித்தபோது, குரூப்-1 அதிகாரியாக சந்தோசியை நியமித்திருந்தார். தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவியும் அளித்தார்.