கொரோனா வைரஸ் தாக்கி அபாய கட்டத்தில் இருப்பவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது போன்ற தேவையிருப்பவர்களை தொடர்பு கொண்டு பிளாஸ்மா தானம் செய்வதாக பணம் பெற்றுக்கொண்டு இளைஞர் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா பிரச்னையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளார். இது போன்ற மோசடி முதல் முறையாக நடந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து மீண்ட நபர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தை செலுத்துவது பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இச்செயல் முறை உயிர் காக்கும் வகையில் உள்ளது.

இதனை அறிந்து கொண்ட இளைஞர் பிளாஸ்மா தானம் என்ற பெயரில் பணம் பறிக்க திட்டம் போட்டுள்ளார். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பிளாஸ்மா தேவை என யாராவது பதிவு செய்துள்ளார்களா என தேடி அவர்களை தொடர்புகொண்டு தான் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும், பிளாஸ்மா தானமளிக்க தயார் எனவும் கூறுவார். பின்னர் தான் வருவதற்கு போக்குவரத்துக்கு பணம் செலுத்துங்கள் என சில ஆயிரங்களை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெற்றுக்கொண்டு மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து வந்துள்ளார். இதனால் பலரும் பிளாஸ்மா கிடைத்துவிடும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது போன்று 200-க்கும் மேற்பட்டோரிடம் கைவரிசை காட்டியுள்ளார் இந்த இளைஞர். பின்னர் கொரோனாவுக்கு எதிரான ஆன்டி வைரல் மருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி சிலரை ஏமாற்றியுள்ளார். இறுதியில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் காவல் நிலையத்தில் புகார் செய்ததால் இளைஞர் சிக்கினார். இது போன்ற நபர்களை கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் எச்சரிக்கையாக அணுகுமாறு ஐதராபாத் போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Source – Dinamalar