சீனாவுடனான ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு

கல்வான் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததையடுத்து, சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர அரசு சீன நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட ரூ.5000 கோடி மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கொரோனா பாதிப்பால் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ‘மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0 என்ற பெயரில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் சிங்கப்பூர், சீனா, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இந்நிலையில் மத்திய அரசுடன் மேற்கொண்ட ஆலோசனையின்படி சீனாவுடனான மூன்று ஒப்பந்தங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறியுள்ளார். இந்திய – சீன மோதலுக்கு முன்பு இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதை நிறுத்தி வைக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கல்வான் மோதலுக்கு பிறகு பிரதமர் மோடியுடன் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, இந்தியா அமைதியை விரும்புவதாகவும், ஆனால் நாம் பலவீனமானவர்கள் இல்லை என்று தெரிவித்தார். பிரதமர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மகாராஷ்டிர மாநில அரசு உறுதுணையாக இருக்கும்’ என்றும் சுபாஷ் தேசாய் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *