சோதனைச் சாவடியில் லாரி மோதி காவலர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சென்னிமலை சாலையிலுள்ள திட்டுப்பாறையில் கொரோனா பரவல் தடுப்பிற்காக காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி கண்காணிப்பு பணியில் ஆயுதப்படை காவலர் பிரபு (23) , தலைமை காவலர் மற்றும் மருத்துவ குழுவினர் ஈடுபட்டிருந்தினர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடியில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் வந்துள்ளது.

இதுகுறித்த தகவல் திட்டுப்பாறை சோதனை சாவடிக்கு தெரிவிக்கப்பபட்டது. இதையடுத்து டிவைடர்களால் சாலையை மறித்து லாரியை மடக்கி பிடிக்க திட்டுப்பாறை சோதனை சாவடி காவலர்கள் தயார்நிலையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த லாரி டிவைடர்களை இடித்து தள்ளிவிட்டு தப்பி சென்றது.

இதையடுத்து லாரியை மடக்கி பிடிக்க காவலர் பிரபு இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றார். அப்போது லாரியை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலர் பிரபு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் காவல்துறையினர் பிரபுவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற லாரியை ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தடுத்து நிறுத்திய போலீசார், லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாஸ்கர் (40) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் லாரியை ஒட்டி வந்தது தெரியவந்தது. விபத்தில் காவலர் பலியானது குறித்து தகவலறிந்து காங்கேயத்திற்கு வந்த மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி திஷா மிட்டல் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *