ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு

ஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி வெள்ளி செங்கல்லை எடுத்து அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய ஐந்து பேர் மட்டும் மேடையில் இருப்பார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழைப்பிதழின் முன் பக்கத்தில், கடவுள் ராமரின் சிலை அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அழைப்பிலும் ஒரு முறை மட்டுமே செயல்படும் பாதுகாப்பு குறியீடு உள்ளது. நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து வெளியேறும் விருந்தினர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர், ‛இது ராமரின் விருப்பம்’ எனக் கூறியுள்ளார். இதுவரை 175 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Source – Dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *