கருப்பர் கூட்டம்’ என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து, கோவையில் சுவர்களில் வேல் வரைந்து சிறுமிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, முருகப் பெருமானை இழிவுபடுத்தியவர்களை கைது செய்யக் கோரி, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று கருப்பர் கூட்ட யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், சாலையோர சுவர்களில் முருகனின் அடையாளமான வேலினை வரைந்து நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர். ‘கந்த சஷ்டி கவசம் குறித்து யாராவது அவதூறு பரப்பினால், வீதியில் இறங்கி போராடுவோம்’ எனவும் அக்குழந்தைகள் எச்சரித்துள்ளனர்.