நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்ட ஸ்வப்னா – என்ஐஏ அறிக்கை

கேரள தங்கக் கடத்தில் வழக்கின் குற்றவாளிகளான ஸ்வப்னா உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்; பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்துள்ளனர்’ என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கேரளாவில் முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி, தங்கம் கடத்தப்படுவது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தூதரகத்தில் முன்பு பணியாற்றிய, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை, என்.ஐ.ஏ., காவலில் எடுத்து விசாரிக்கிறது. அவர்களை, 24ம் தேதி வரை விசாரிக்க, என்.ஐ.ஏ.,வுக்கு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. அப்போது, வழக்கின் விசாரணை குறித்து, என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஸ்வப்னா உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, தங்கக் கடத்தலில் ஈடுபட்டனர். மேலும், அதில் கிடைத்த பணத்தை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்துள்ளனர்.யு.ஏ.இ., தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இது அந்த நாட்டுடனான நம் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில், நாட்டின் நலனுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Source – Dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *