தங்கம் கடத்தல்: பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்

கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ந்தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்திருந்தது. சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அதை பிரித்துப்பார்த்தபோது அதில் 30 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன.வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பல் ஒன்று இந்த தங்கத்தை அனுப்பி வைத்திருப்பதாக தெரிகிறது. தூதரக பொருட்களுக்கு பரிசோதனையில் இருந்து விலக்கு இருப்பதால், இந்த நூதன வழியை கடத்தல் காரர்கள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டதால் அது குறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது. இதில் தூதரக முன்னாள் ஊழியரான சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்த ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கிடையே விமான நிலையத்தில் சிக்கிய தங்கத்தை விடுவிக்குமாறு முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், ஐ.டி. துறை செயலாளருமான சிவசங்கர் மீது சந்தேகம் வலுத்து வருகிறது.

இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். எனினும் ஐ.டி. துறை செயலாளராக அவர் தொடர்வார் என தெரிகிறது.

இந்த நிலையில் தங்கம் கடத்தல் விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த கடத்தலில் முதல்-மந்திரி அலுவலகத்தின் பெயரும் அடிபடுவதால், கடத்தலில் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளன.

இந்த மோசமான செயல் தொடர்பான விசாரணையில் உடனடியாக தலையிட்டு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமீரகத்துடனான நீண்டகால நட்புக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில எதிர்க் கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ‘கேரள அரசில் பணியாற்றும் அதிகாரிகளின் உதவியுடன் சர்வதேச தங்கம் கடத்தல் கும்பல் தூதரக தனியுரிமையை தவறாக பயன்படுத்தி இருக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விவகாரம் ஆகும். இது ஜெனிவா மாநாட்டு விதிமுறைகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதல்-மந்திரி இனியும் மவுனமாக இருக்க முடியாது எனக்குறிப்பிட்டார். பினராயி விஜயனின் அலுவலகம், குற்றவாளிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றம் சாட்டிய அவர், ஒட்டுமொத்த இந்த விவகாரம் குறித்தும், முதல்-மந்திரி அலுவலகத்தின் தொடர்பு குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதைப்போல தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மட்டுமின்றி, அவரது அலுவலக ஊழியர்கள் மற்றும் ஏராளமான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜனதா தலைவர் சுரேந்திரனும் குற்றம் சாட்டினார்.

சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறியதையே, இந்த தங்கம் கடத்தல் விவகாரத்தில் பினராயி விஜயனும் ஒப்புவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *