உபி, கான்பூரில் ரவுடிகளுடன் நடந்த மோதலில் 8 போலீசார் சுட்டுக்கொலை

கான்பூர்: உத்தர பிரதேச போலீசாரால் நீண்ட ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி விகாஸ் துபே. அவர் மீது 50க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2001ம் ஆண்டில் உத்தர பிரதேச பாஜக பிரமுகரான சந்தோஷ் சுக்லாவை காவல் நிலையத்திலேயே வெட்டி கொன்ற வழக்கும் உள்ளது. அவரை பிடிக்க பல ஆண்டுகளாக உத்தர பிரதேச போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் விகாஸ் துபே மற்றும் கூட்டாளிகளுடன் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த  விகாஸ் துபேயை தேடி  டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி நின்றிருந்த துபேவின் ஆட்கள் ஜேசிபியை சாலையின் நடுவழியில் நிறுத்தை போலீசாரை மறைத்தனர் அப்போது, போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் திடீரென போலீசார் மீது அக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த கோர சம்பவத்தில் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  மேலும், சில போலீசார் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரவுடிகள் தாக்குதலில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டது  கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்விடத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *