கடந்த மாதம், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீனாவை சேர்ந்த, 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதுகுறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: கடந்த ஏப்ரல் மாதம், முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டன. அதன்படி, அண்டை நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என்றால், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும். புதிய அல்லது கூடுதல் நிதி முதலீடுகளுக்கும், இந்த விதிமுறைகள் பொருந்தும்.
இந்நிலையில், இந்தியாவில் முதலீடு செய்ய, சீன நிறுவனங்கள், 50 முதலீட்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. எனினும், இந்திய – சீனா இடையிலான பிரச்னையால், இந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. அவற்றை பரிசீலிப்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த விஷயத்தில், கவனமாக செயல்பட்டு வருகிறோம் என மூத்த அதிகாரி கூறினார்.