சீனாவுடனான ரூ.900 கோடி வர்த்தக உறவை ரத்து செய்வதாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்தனர். சீனாவின் அத்துமீறலால் ஆத்திரமடைந்த இந்திய மக்கள், சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் சீன இறக்குமதியை படிப்படியாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் முடிவுக்கு பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.

அந்த வகையில் சீனாவுடனான ரூ.900 கோடி மதிப்பிலான வர்த்தக உறவை ரத்து செய்வதாக ஹீரோ சைக்கிள்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பங்கஜ் முன்ஜல் தெரிவித்துள்ளார். அடுத்த 4 மாதங்களில் சீனாவுடன் ரூ.900 கோடி மதிப்புள்ள வணிகத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், சீன தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கு உதவும் வகையில் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் உயர்தர மிதிவண்டிகளின் பாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. சந்தைகளில் இந்த சைக்கிள்களின் விலை ரூ.15,000 முதல் ரூ. 7 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சீனாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொண்டதால் புதிய சந்தைகளை தேடுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு பதிலாக ஜெர்மனியில் அதன் தொழிற்சாலையை அமைக்க ஹீரோ சைக்கிள்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பங்கஜ் முன்ஜல் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக உலகளவில் சைக்கிள்களின் தேவை அதிகரித்துள்ளது. ஊரடங்கால் சிறிய நிறுவனங்கள் அதிக வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. அவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் அவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர சைக்கிள் பாகங்களை இங்கேயே தயாரிக்க முடியும். ஒவ்வொரு வகை சைக்கிள் உற்பத்தியும் இந்தியாவில் சாத்தியம்’ என்றார். இந்தியாவால் சமீபத்திய கணினிகளை உருவாக்க முடியும் போது, உயர் தொழில்நுட்ப சைக்கிள்களை ஏன் உருவாக்க முடியாது என்றும் பங்கஜ் முன்ஜல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *