சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு

புதுடில்லி: இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்களுக்கு மத்தியில், சீன – இந்திய எல்லையில் நடந்து வரும் சாலை திட்டங்களை மத்திய அரசு ஆய்வு செய்ததுடன், அவற்றில் 32 பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்துறை அமைச்சகம் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மத்திய பொதுப்பணித் துறை, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்துறை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

சீனாவின் எல்லையில் உள்ள 32 சாலைத் திட்டங்களில் பணிகள் துரிதப்படுத்தப்படும். மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் திட்டங்களை விரைவாகக் கண்காணிக்க ஒத்துழைப்பை வழங்கும் என்று கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன – இந்திய எல்லையில் மொத்தம் 73 சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில், எல்லைப்புற உள்கட்டமைப்பு தொடர்பான அனைத்து திட்டங்களும் உள்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ், மத்திய பொதுப்பணித் துறை மற்றும் எல்லை சாலைகள் அமைப்பால் செயல்படுத்தப்படுகிறது.

ராணுவ மோதல் உச்சத்தில் உள்ள லடாக்கில் எல்லை சாலைகள் அமைப்பால் மூன்று முக்கிய சாலைகள் கட்டப்படுகின்றன என்று ஒரு அதிகாரி கூறினார்.

சாலைகள் தவிர, மின்சாரம், சுகாதாரம், தொலைத் தொடர்பு மற்றும் கல்வி போன்ற பிற எல்லை உள்கட்டமைப்புகளின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கடந்த 2008 – 17 ஆம் ஆண்டுகளில் வெறும் 230 கி.மீ. சாலைகள் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில், 2017 – 20 ஆண்டுகளில் மட்டும் எல்லையில் 470 கி.மீ சாலைப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *