புதுடில்லி: ரூ.9.50 லட்சம் கோடி மதிப்பிலான, 371 சீன பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல் ஒழித்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து, பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு கருவிகள், ஆடைகள், மின்னணு சாதனங்கள் உட்பட, 9.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 371 பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.