சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுப்பு, இந்திய ஆலைகளுக்கு பெரிய வாய்ப்பு – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை முன்னிட்டு டிக்டாக், ஹெலோ உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.  இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவற்றுக்கு தடை விதிப்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று கூறும்பொழுது, உலக பொருளாதார சூழல் நமக்கு சாதகம் ஆக உள்ளது.  சீனாவுடன் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ள உலக நாடுகள் அதிக விருப்பம் காட்டவில்லை.

இது இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கிடைத்த பெரிய சந்தர்ப்பம்.  இது ஒரு மறைமுக ஆசீர்வாதம் ஆகும்.  இந்த சூழ்நிலையை நமக்கு சாதகம் ஆக நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்.  அதிக போட்டியை ஏற்படுத்த முடியும்.  தரத்தில் கவனம் செலுத்த முடியும் என கூறியுள்ளார்.

நமது நாட்டில் பிற நாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் தொடங்குவதற்கான சூழல் எளிமையாக்கப்பட்டு உள்ளது.  இதற்கான தரவரிசையில், இந்தியாவின் இடம் உலக வங்கியால் முன்பே உயர்த்தி அறிவிக்கப்பட்டது.  ஆனால், வர்த்தகம் தொடங்குவதற்கான அனுமதி, சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதில் அதிக சிக்கல் உள்ளது.

இதனால் அனைத்து நடைமுறைகளையும் டிஜிட்டல் மயம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம்.  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.), வேளாண் வளர்ச்சி விகிதம் மற்றும் கிராமப்புற தொழிற்சாலை வளர்ச்சி ஆகியவற்றை அதிகரிப்பதே நம்முடைய குறிக்கோள் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *