பவானிசாகர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் சித்தன் குட்டை நீர்த்தேக்க பகுதியில் அன்னூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் பிரனேஷ், யஸ்விந்த், கதிரேசன், ரகுராம் மற்றும் சுரேஷ்ராஜா ஆகிய ஐந்து மாணவர்கள் குளிப்பதற்கு சென்றுள்ளனர். இதில் சுரேஷ்ராஜ் மட்டும் தான் குளிக்க வரவில்லை என்று கரையிலேயே உட்கார்ந்து கொண்டார்.

பிரனேஷ், யஸ்வந்த், கதிரேசன், ரகுராம் 4 பேரும் நீர்த்தேக்க பகுதியில் இறங்கி குளிக்க தொடங்கினார்கள். அப்போது அவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் 4 பேரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்கள். கைகளை ஆட்டியபடி அவர்கள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்தை சுரேஷ்ராஜ் பதறிப்போய் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்‘ என்று அபயக்குரல் எழுப்பினார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் 4 மாணவர்களையும் காப்பாற்ற முடியவில்லை.

சுரேஷ்ராஜ் உடனே பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பிறகு சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சித்தன்குட்டைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர்.

மேலும் இதுகுறித்து பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *