பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க 6 மாதம் தடை விதித்தது ஐரோப்பிய யூனியன்

லாகூர்: பாகிஸ்தானில் பணி புரிந்து வரும் 860 விமானிகளில் 262 பேர் போலியான உரிமம் வைத்துள்ளனர் அல்லது விமானி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் என அந்நாட்டு விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி குலாம் சர்வார் கான் கடந்த வாரம் பாரளுமன்றத்தில் தெரிவித்தார். 

இதில் பாதிக்கும் அதிகமானோர் பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரிபவர்கள் என அவர் தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரியும் 434 விமானிகளில் 141 உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி குலாம் சர்வார் கான் பாராளுமன்றத்தில் தெரிவித்த இந்த கருத்து உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகள் பாகிஸ்தான் விமான சேவையை தவிர்க்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், உரிமம் மோசடி விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் பாகிஸ்தான் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு 6 மாதங்கள் தடை விதித்துள்ளது. இந்த தடையின் மூலம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் இனி ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்ய முடியாது. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள தகவலை பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த தடை இன்று முதல் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் அதன் பின்னர் நிலைமையை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் முடிவு எடுக்கப்படும் எனவும் ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *