ரூ.14,500 கோடி வங்கி மோசடி, காங்கிரஸ் பொருளாளர் அகமது படேலிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், ராஜ்ய சபா எம்.பியும்,  சோனியா காந்திக்கு நெருக்கமான நபராக அறியப்படும் அகமது படேலின் வீட்டிற்கு இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். 

சந்தேசரா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களான நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா மற்றும் தீப்தி சந்தேசரா ஆகியோர் SBI, யூகோ, பேங்க் ஆஃப் இந்தியா உட்பட சில முக்கிய வங்கிகளில் 14,500 கோடி ரூபாய் ரூபாய்க்கும் மேல் பண மோசடி செய்து ஏமாற்றியது அமலாக்கத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து இதை விசாரித்த அமலாக்கத்துறையினர் கடந்த 2017’ஆம் ஆண்டில், சந்தேசரா குழுமத்தின் ஊழியர்களில் ஒருவரை கைது செய்து, அவரது அறிக்கை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். 

இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேசரா குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகளிடமிருந்து சுமார் 9,000 கோடி ரூபாய் கடனைப் பெற்றுள்ளன என்பது தெரியவந்தது. இது நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரால் செய்யப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை விட சந்தேசரா மோசடி மிகப் பெரியது என்று கடந்த ஆண்டு அமலாக்க இயக்குரகம் அறிவித்தது. 


இதனிடையே ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்களான நிதின் சந்தேசரா மற்றும் அவரது குடும்பத்தினர் நைஜீரியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர்களுக்கு எதிராக இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி நிதின் சந்தேசரா காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலின் மகன் மற்றும் மருமகனின் இல்லத்திற்கு பெரும் தொகையுடன் சென்றதாகவும் இந்த இருவரின் மூலமாக நிறைய காங்கிரஸ் தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் படேல் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தாங்கள் இந்த வழக்கில் சிக்கவைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக படேலின் மகன் பைசல் மற்றும் மருமகன் இர்பான் சித்திக் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். மேலும் விசாரணையின் போது அவர்கள் நிதின் சந்தேசராவை தெரியும் என ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 
காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல் மட்டும் உடல்நலக் குறைவையும், கொரோனா பரவலையும் காரணம் காட்டி அமலாக்கத்துறை விசாரணையைத் தவிர்த்தார். மேலும் அவர் 60 வயதைக் கடந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியிருந்தார். 

இந்நிலையில் சந்தேசரா குடும்பத்தின் வங்கி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலின் வீட்டிற்கு சென்றனர். சுமார் 8 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 வயதாகும் அகமது பட்டேல், கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *