கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது

சாலை விபத்தில் முதியவர் பலியாக காரணமாக இருந்த இலங்கையின் குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டார்.

இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் 25. இதுவரை 44 டெஸ்ட் (2,995 ரன்), 76 ஒருநாள் (2,167), 26 சர்வதேச ‘டுவென்டி–20’ (484) போட்டிகளில் விளையாடி உள்ள இவர், கொரோனா ஊரடங்கிற்கு பின் நடந்த தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றார்.

கொழும்புவின் புறநகர் பகுதியான பனதுராவில் அதிகாலை 5 மணியளவில் கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்த இவர், சைக்கிளில் சென்ற 64 வயது முதியவர் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதனையடுத்து இலங்கை போலீசார், மெண்டிசை கைது செய்தனர். இவரை, நீதிபதி முன் ஆஜர் படுத்தியதாக கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 2003ல், நடந்து சென்ற பெண் மீது காரை ஏற்றி பலியான வழக்கில் முன்னாள் ‘சுழல்’ வீரர் கவுசால் லோகுவாராச்சிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *