கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், பிரதமர் நிவாரண நிதியை காங்கிரஸ் தலைமை தவறாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. சோனியா காந்தி தலைவராக உள்ள இராஜிவ்காந்தி பவுண்டேசனுக்கு மக்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்ட அல்லது வரிப்பணத்தின் மூலம் சேர்த்திருக்கிற பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ஒரு தனியார் நிறுவனம்/அறக்கட்டளைக்கு எவ்வாறு பணத்தை கொடுக்கமுடியும்? தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தின் தன் தலைமையிலிருக்கிற அரசுப்பணத்தை தன்னுடைய தலைமையில் இருக்கிற தனியார் நிறுவனத்திற்கு மாற்றியது பெரும் ஊழல் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாது பல அரசு நிறுவனங்களும், அமைச்சகங்களும் இந்த பவுண்டேசனுக்குக் கீழ் உள்ள இராஜிவ்காந்தி கல்விமையத்திற்கு நன்கொடையளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஒரு ஆங்கில டிவி சேனலுக்கு கிடைத்த ஆவணங்களில், மனித வளத்துறை, உள்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, சுகாதாரத்துறை ஆகிய அமைச்சகங்கள் நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பவுண்டேசனில் பதவியில் இருக்கும் ப.சிதம்பரம் அந்நேரத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் எல்ஐசி, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா(எஸ்ஏஐஎல்), கெயில் இந்தியா நிறுவனம், ஓஐஎல்( ஆயில் இந்தியா லிமிடெட்), ஓரியன்டல் வங்கி, எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, ஹவுசிங் மற்றும் அர்பன் டெவலப்மென்ட் கார்பரேசன் கழகம்(ஹட்கோ), ஓஎன்ஜிசி உள்ளிட்ட 11 பொதுத்துறை நிறுவனங்களும் நன்கொடை அளித்துள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி மறுக்காத நிலையில், எவ்வளவு பணம், ராஜிவ் சமகால கல்வி மையத்திற்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பிட்ரா கூறுகையில், ராஜிவ் சமகால மையத்திற்கு திருப்பிவிடப்பட்ட நிதி குறித்து ஏன் ஆய்வு செய்யப்படவில்லை. 3 வருடங்களாக ஆடிட்டர் மாற்றப்படாதது ஏன்? அந்த மையத்தின் ஆடிட்டராக இருந்த ரமேஷ் தாகூருக்கு காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கியதுடன், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மற்றும் ம.பி., மாநிலங்களின் கவர்னராக நியமித்தது. பார்லிமென்ட் விவகாரத்துறை உள்ளிட்ட பல அமைச்சக பொறுப்புகளும் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தெளிவாக விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, பா.ஜ., தலைவர் நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது நாடு முழுவதும் பேரிடர்களை சந்திக்கும் மக்களுக்கானது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இதிலிருந்து ராஜிவ் அறக்கட்டளை(ஆர்ஜிஎப்)க்கு நன்கொடை வழங்கப்பட்டது. பிரதமர் தேசிய நிவாரண நிதி வாரியத்தில் தலைவராக இருந்தது யார்? சோனியா, ராஜிவ் அறக்கட்டளையின் தலைமை பதவியில் இருந்தது யார்? சோனியா தான். எந்தவித அறிவுணர்வும் இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல் இதன் நடைமுறைகள் இருந்துள்ளன என தெரிவித்திருந்தார்.
வங்கி ஊழலில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த மெகுல் சோக்ஷி போன்ற ஊழல் தொழிலதிபர்கள் பலர் இந்த பவுண்டேசனுக்கு பெருமளவில் நிதியளித்திருப்பதும், நிதியளித்தவர்களுக்கு வங்கிக்கடன்கள் எந்தவித பாதுகாப்பு இல்லாமல் அரசியல் வாதிகளின் உதவியுடன் வழங்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இருந்தும் இந்த முறைகேடுகளின் மீது ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைப் பற்றி பாஜக எதுவும் கூறாமல் சோனியா காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக தலைவர் அறிக்கை விட்டது பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.