இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணம் மேற்கொள்ளவும், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ், பாகிஸ்தான் அரசிடம் இருந்து பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது.

மத்திய அரசு கடந்தாண்டு ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டன் பார்லிமென்டில், காஷ்மீர் விவகார ஆலோசனை குழு தலைவராக இருக்கும் அவர், இந்திய அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வந்தார். பாக்.,உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும் டெபி ஆப்ரகாம்ஸ்க்கும் நெருக்கமான தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து டில்லிக்கு வந்த அவரிடம் முறையான, ‘விசா’ இல்லை எனக் கூறிய அதிகாரிகள், இந்தியாவிற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர். இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்த அமைக்கப்பட்ட பிரிட்டன் அனைத்து கட்சி பார்லி.,குழு, பாகிஸ்தானிடம் இருந்து ரூ. 30 லட்சம் பணமாக பெற்றுள்ளது. பிரிட்டன் அனைத்து கட்சி பார்லி.,குழு உறுப்பினர் பதிவேட்டில், 1,500 பவுண்டுக்கும் மேல் பணம் பெறப்பட்டுள்ளதாக, இதன் மூலம் நன்மை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்துக்கான பிரிட்டன் அனைத்து கட்சி பார்லி., குழு, பிப்.18 முதல் 22 வரை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, பிப்.18ம் தேதி பாக்., ரூபாய் மதிப்பில், ரூ. 29.7 லட்சம் மற்றும் ரூ.31.2 லட்சத்தை பாகிஸ்தான் அரசிடம் இருந்து பெற்றுள்ளது. இந்தியாவுக்குள் உரிய விசா இல்லாமல் நுழைய முயன்ற அவரை மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், பாகிஸ்தான் சென்ற டெபி ஆப்ரகாம்ஸ், பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சு நடத்தினார். அதன் பின்னரே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளுக்கு அவர் சென்றார். பிரிட்டன் பார்லி., குழுவில் இடம்பெற்றிருந்த தொழிலாளர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source – Dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *