பீகார் தலைநகர் பாட்னாவில் பெரிய பாலம் கட்டுவதற்காக சீனா நிறுவனத்துடனான ரூபாய். 2,900 கோடி ஒப்பந்தத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா-சீனா இடையே பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. பின்னர் இந்தியாவில் உள்ள பல இடங்களில் சீனாவை கண்டித்தும் மற்றும் பொருட்களை தவிர்ப்பதற்கு பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், சீனா நாட்டின் பொருட்களை,செயலிகள் போன்றவற்றை இந்தியா மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாட்னாவில் கங்கை நதியின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை-19 இணைக்கும் வகையிலும் 4 வழிப்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இது ஒரு ரயில்வே மேம்பாலம், 4 சிறிய பாலங்கள், 13 சாலைகளை இணைக்கும் பாலம், பேருந்துகள் நிறுத்தும் 5 நிறுத்தங்கள் என மிகப்பெரிய திட்டமாகும். இந்த பாலம் ஏறக்குறைய 5.63 கி.மீ தொலைவு கொண்டதாக ரூ.2,900 கோடி திட்ட மதிப்பில் வடிவமைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 3.5 ஆண்டுகளில் அதாவது 2023-ம் ஆண்டு இந்தப்பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்த விடுக்கப்பட்ட டெண்டரில் 4 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. அதில் இரு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்காக பீகார் அரசு தேர்வு செய்திருந்தது. அந்த இரு நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை நடத்த முடிவு செய்ததால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது பீகார் அரசு
இதுகுறித்து பீகார் மாநில சாலைப் போக்குவரத்து அமைச்சர் நந்த்கிஷோர் யாதவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ பாட்னாவில் கங்கை நிதியின் குறுக்கே 5 கி.மீ தொலைவுக்கு பாலம் கட்ட ரூ.2900 கோடி ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தோம், அந்த இரு நிருவனங்களும் சீனாவின் “சைனா ஹார்பர் எஞ்சினியரிங் கம்பெனி”, “ஷான்க்ஸி ரோட் பிரிட்ஜ் கம்பெனி” ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த இருந்தன.
நாங்கள் இந்த இரு சீன நிறுவனங்கள் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த கூறி கோரிக்கை விடுத்தோம், அதற்கு அந்த இரு நிறுவனங்களும் மறுத்ததால், ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். மீண்டும் புதிதாக டெண்டர் விடுவோம்” எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு சீனா நிறுவனத்துடனான 5 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.