அசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகர் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 10 ஆயிரம் பேர், மூன்று கிராமங்களுக்கு சீல்

அசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகரின் இறுதிச் சடங்கில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 31-ம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜமாத் உல்மா அமைப்பின் துணைத் தலைவர் 87 வயதான கைருல் இஸ்லாம் கடந்த சில தினங்களுக்கு உடல்நலம் குன்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு ஜூலை 2-ம் தேதி நடைபெற்றது. அவருடைய மகன் அமினுள் இஸ்லாம் எம்.எல்.ஏவாக இருந்துவருகிறார். ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற இறுதிச் சடங்கில் 10,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி இத்தனை மக்கள் கலந்துகொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில், இதுவரையில் 11,000-த்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 1,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில் இத்தனை மக்கள் ஒன்று கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறை மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியன தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துளனர். இறுதிச் சடங்கு நடைபெற்ற நாகோன் மாவட்டத்தில் மூன்று கிராமங்களை முழுவதமாக அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *