டில்லியில் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு

புதுடில்லி : ‘டில்லியில் உள்ள ஒவ்வொருவருக்கும், கொரோனா பரிசோதனை செய்வோம்’ என, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை, சென்னை நகரங்களுக்கு அடுத்தபடியாக, தலைநகர் டில்லியில், கொரோனா வைரஸ் பரவல், அதி தீவிரமாக உள்ளது. குறிப்பாக, அரசில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், தொற்று ஏற்பட்டு கொண்டிருப்பதால், அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென்ற நிலை, உருவாகிஉள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, நேரிடையாக களத்தில் குதித்து உள்ளது.

முன்னதாக, அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நேற்று முன்தினம், டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகமான நார்த் பிளாக்கில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், ஆம்ஆத்மி சார்பில், ராஜ்யசபா, எம்.பி., சஞ்சய்சிங்கும், டில்லி பா.ஜ., தலைவர் ஆதேஷ் குப்தாவும், காங்., தலைவர் சவுத்ரி அனில் குமாரும் கலந்து கொண்டனர். மேலும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், டில்லி மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலும் கலந்து கொண்டார்.

அப்போது, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களை, களத்தில் இறக்க வேண்டும். ‘சோதனைகளை அதிகப்படுத்துவதுடன், அவற்றை வரைமுறை படுத்த வேண்டும்’ என்ற யோசனைகளை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ”தினமும், 18 ஆயிரம் பேருக்கு, பரிசோதனைகள் செய்ய டில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில் உள்ள ஒவ்வொருவரையும் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ”டில்லியை ஒட்டி இருக்கும் நொய்டா, காஜியாபாத், குர்கான் நகரங்களிலும், பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *