ராணுவத்தின் வீரத்தை பார்த்து 130 கோடி மக்கள் பெருமை – லடாக்கில் ராணுவத்தினருடன் பிரதமர் மோடி உற்சாக பேச்சு

ஜூன் மாத மத்தியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு பிரதமர் நரேந்திர மோடி, இன்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர்.

லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார்.

பலகீனமாக உள்ளவர்களால் அமைதிக்கான முயற்சியை ஒருபோதும் தொடங்க முடியாது. உலகப் போரோ அல்லது அமைதியோ, எப்போதெல்லாம் தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் நமது வீரர்களின் வெற்றியையும் அமைதியை நோக்கிய நமது முயற்சியையும் இந்த உலகம் கண்டுள்ளது. நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பணியாற்றியுள்ளோம். கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த ராணுவத்தினருக்காக மீண்டும் நான் மரியாதை செலுத்துகிறேன். சுயச்சார்பு இந்தியாவுக்கான முயற்சி உங்களின் தியாகத்தால் வலுவடைகிறது.

ராணுவத்தினர் சமீபத்தில் வெளிப்படுத்திய வீரம், இந்த உலகத்திற்கான இந்தியாவின் வலிமை குறித்த செய்தியாக இருந்தது. நீங்கள் பணி செய்யும் இடத்தின் உயரத்தைக் காட்டிலும் உங்களின் தைரியம் உயர்ந்து நிற்கிறது. உங்கள் தைரியம் மற்றும் வீரம் குறித்துதான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. பாரத மாதாவின் எதிரிகள் உங்களின் தீர்க்கத்தை பார்த்துவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளுக்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான காலம். ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் சக்திகள் தோற்று போவதையோ அல்லது திருப்பி அனுப்பப்படுவதையோ வரலாறு கண்டுள்ளது.எல்லைப் புறத்தில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதி மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு பிடிக்கும் கொள்கைக்கு இந்த உலகம் எதிராக உள்ளது. நாடு பிடிக்கும் காலம் மலையேறி சென்றுவிட்டது. ஒவவொரு நாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றன. எல்லை பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது முழுவீச்சில் நடக்கும். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் எல்லையில் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

நாம் புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணர்கள் தான், அதே சமயம் நம்மிடம் சுதர்சன சக்கரமும் உள்ளது. அமைதியை விரும்பும் நாம் தேவைபட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்க தயங்க மாட்டோம். நாட்டை அபகரிக்க்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளனர், இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *