மதுரை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் நேற்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என்பது தமிழக அரசுக்கு நிம்மதியான ஒரு செய்தியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதியைக் குலைக்கும் வகையில் நேற்று மதுரையில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு அரசு அறிவிப்பு படி 550 ஆகி விட்டது. நேற்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா ‘பாசிட்டிவ்’ ஆகி உள்ளது. சென்னையில் ஆரம்பத்தில் தினமும் பாதிப்பு 100 என்று தான் இருந்தது. பின்னர் 1,500 பேர் வரை பாதிக்கப்பட்டனர். இப்படியே போனால் மதுரைக்கும் அந்த நிலை வரும் என்று மக்கள் திக்…திக் என பீதியில் உள்ளனர்.
தலைநகர் நிலை வந்தால் மதுரை தாங்காது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம், தென் மாவட்டங்களின் தலைநகர் என்றெல்லாம் பெருமையாகச் சொன்னாலும் மதுரையில் ஒரே ஒரு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை தான் உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் சென்னையை போல எதிர்கொள்வது கடினம். எனவே இப்போதைக்கு தொற்றை மேலும் பரவாமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே வழி சென்னை போன்று இன்னொரு ஊரடங்கு தான்..சென்னை நிலை மதுரைக்கு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவதே தீர்வாகும்.